Wednesday, February 4, 2009

தமிழ் மறந்தே போகுமா ? ( வழக்கொழிந்த சொற்கள் )



தமிழில் இரண்டு இலட்சம் சொற்கள் உண்டு என்று இயம்புவதுண்டு.இதைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதப்பதும் உண்டு.ஆனால் தமிழ் நாட்டிலோ; மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்களும் அப்படியொரு ஆங்கில மோகம்.தவிர்க்க முடியாததும்,
தள்ளமுடியாததுமாகி விட்டது. படிக்காதவர்கள் இப்படி என்றால் படித்தவர்களையும் ஊடகங்களையும் பற்றி சொல்ல தேவையில்லை.இப்பொழுதெல்லாம் கீளின் பண்ணு
( சுத்தம் செய் ),ரெண்ட் ( வாடகை ), கார் ( மகிழுந்து ), குயிக்கா இழு
( விரைவாக இழு ) என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு நாம் ஆட்பட்டு விட்டோம்.

நேற்று நாம் எப்படி இருந்தோம்.

பொங்க அடுப்புமுண்டு
பொங்கி வெளியே வந்து
பொகை போகச் சன்னலுண்டு

என்று சொல்லும் இல்லங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதா? இல்லையே பின் எப்படி மொழி மட்டும் மாறாமல் அப்படியே இருக்க முடியுமா?.ஆனாலும்
ஊரிலிருந்துப் பொழுதும், உறவினர்களுடன் உரையாடிப் பொழுதும், உதடுகள் உச்சரித்தச் சொற்கள் எல்லாம் மனதை விட்டு மறையும்பொழுதும்,வழக்கொழிக்கும்பொழுதும் வருத்தத்தான் வரச்செய்கிறது.

சிறுவனாக இருக்கையில் " ஒரியாட்டம் போடாமல், பொட்டாட்டம் இருக்க வேண்டும் இல்லையெனில் பண்டுதம் பார்க்க வேண்டும் " என்று அம்மிச்சி சொன்ன சொற்கள் இன்னும் நினைவை விட்டு அகல மறுக்கின்றது.

இப்படித் தான் ஒருமுறை உறவினர் ஒருவர் ஈரோட்டிலிருந்து எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரவில் தங்கிவிட்டு, மறுநாள் சீக்கடி என்று சொன்னப்பொழுது தூக்கி வாரிப் போட்டது.அப்பொழுது அம்மா , சொள்ளை ( கொசு )தான் கூறுகின்றார் என்று விளங்கிப்பொழுது விளங்கியது.

ஊடகங்கள் உதவி செய்வதை விட ஊறு தாம் விளைவிக்கின்றன, வானொலியில் நடக்கும் இந்த உரையாடலைக் கவனிங்கள்

" என்ன செய்யுறீங்க "

" தறி வச்சிருக்கோம் "

" லூம்சா ? கைத்தறியா ? "

" கையாலேதாங்க "

" உங்க ஹஸ்பெண்டுக்கு உதவுறதுண்டா ? "

" இல்லிங்க, வீட்டு வேலைதாங்க "

" ஓகோ ஹவுஸ் ஓய்பா ? "

தறி நெய்து வாழும் சிற்றூர் எளிய மக்களிடம் " இல்லத்தரசியை " - " ஒய்பு " ஆக்கும் வேதனையை என்னவென்று சொல்லுவது ?

தாலியைத் தெரிந்த நாமில் எத்தனைப் பேருக்கு தாழி, தாளி என்றால் என்னவென்று தெரியுமும்?

தாளை அறிந்தவர்கள் தாழையும், தாலையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

விரலைப் பார்த்தவர்களுக்கு விறலைத் தெரிந்திருக்க முடியாது.

வயிறு நினைவு வரும் அளவிற்கு பொந்தியும், கும்பியும் நினைவிற்கு வரவில்லை

சண்டை நினைக்கும்பொழுது சரவையும்,சல்லியமும் வருவதில்லை.

சினுக்குவரியும், மை கோதியும் மண்டைப் போட்டு உடைத்தாலும் கையில் சிக்குவதில்லை.

Rumour தெரிந்த நமக்கு உவலையும் புரளியும் தெரிவதில்லை.

நீராகாரம் இல்லாதப் பொழுது உவகாரத்திற்கு எங்கே போவது ?

சதுரம் (உடல்), கும்பா ( சர விளக்கு ), கோப்பு ( உருவம் ),இண்டு ( முள் மரம் ), கொப்பு (காதில் அணியும் நகை ), சாடு ( கூடை விடப் பெரியது ), குணுக்கு ( காதணி ),சட்டம் ( உடல் ), மஞ்சி ( மேகம் ), பதக்கம் ( தாலி ),தொசுக்கு ( தொடுப்பு ), காராட்டம் ( ஓரியாட்டம் ), ஒலுங்கு ( கொசு ), கின்னம் ( துன்பம் ) இன்னும் எத்தனைச் சொற்கள்.

சொற்களை மறக்காமல் இருக்கத் தான் இந்தப் பதிவுகள்
1.கொங்கு வட்டார வழக்கு

2.நெல்லை வட்டாரச் சொற்கள்

இன்னும் வேண்டுமா இவர்கள் எழுதுவதைப் படிக்கவும்.
1.பழமைபேசி

2.திவ்யாபிரியா

3. லதானந்த்


பிறைநிலாவைப் பார்த்து
மகன் கேட்டான்.
" ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ? "
தகப்பன் சிரித்துக் கொண்டு
பதில் சொன்னான்.
அதுக்கும் நம்மைப் போல்
மாதக்கடைசியோ
என்னவோ மகனே !

என்றுச் சொல்லாமல்,முடிந்தது முடிந்தாக இருக்கட்டும், இன்று முதல் இல்லை இல்லை இப்பொழுது இருந்தே தமிழரிடம் தமிழைப் பேசுவோம்.

இந்தத் தொடர்விளையாட்டுக்கு அழைத்த அமுதா அவர்களுக்கும் மற்றும் தமிழ்தினா அவர்களுக்கும் நன்றிகள்.

தொடர் பதிவு என்பதால் பல நல்ல உள்ளங்களை பதிவு இட அழைக்கின்றேன்.

1.கோமா அவர்கள்

2.அகரம்.அமுதா அவர்கள்

3.ஹேமா அவர்கள்

4.பாச மலர் அவர்கள்

5.ஜோதிபாரதி அவர்கள்

6.Ramya Ramani அவர்கள்

7.கவிநயா அவர்கள்

8.சதங்கா அவர்கள்

9.சின்ன அம்மிணி அவர்கள்

10.ஆ! இதழ்கள் அவர்கள்

11.ஒளியவன் அவர்கள்

12.விஷ்ணு அவர்கள்

13.சுந்தரா அவர்கள்

இறுதியாக தமிழண்ணல் அவர்களின் வரிகள்

நீ யார்?

உன் பெயரென்ன ?

உன் நிலையான முகவரி எது ?

உனக்கு - அதாவது உன்னை நீதான் என உறுதிப் படுத்துவதற்கு, உன் உடம்பில் ஏதும் மச்சம் இருக்கிறதா? வேறு அடையாளம் ஏதும் இருக்கிறதா ?

உனக்குச் சொந்த வீடு இருக்கிறதா?

உனக்கென்று ஏதேனும் சொத்து,செல்வம், தோட்டம் துரவு உள்ளதா?

உனக்குத் தெரிந்த , பெரியவர்கள் யாரும் இருக்கிறார்களா?

உனக்குக் குடும்பம், பிள்ளைகள், உறவுகள் உண்டா?

இவ்வளவும் கேட்கிறார்களே ? ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு வங்கிக் கணக்குக்கு, கடவுச்சீட்டுக்கு,வீடு கட்டக் கடனுக்கு - இவ்வாறு எதற்கெடுத்தாலும் நாம் உரிய விடை கூறி, எழுதிக் கொடுத்து , நம்மை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டிளதே?

தமிழர்களாகிய நாம் நம் தாய்மொழியை இல்லை என்று மறுக்க முடியுமா? ஒங்கி அறைந்தால், உண்மை வெளிப்படுமே , அம்மா ! என்று.

நமக்கு ஆங்கிலம் தொடர்புக்கு வேண்டும்; அதற்காக நாம் ஆங்கிலேயர்கள் ஆக முடியுமா ?

வருமானம் வேண்டும்; வயிற்றுப்பிழைப்புக்கு வழி வேண்டும்; அதற்கு ஆங்கிலம் உதவுகிறது.அது என்றும் உதவும் என்று கூற முடியுமா ?

தன்னை இழந்து வாழ்வதா? தரம் இழந்து தாழ்வதா? நாம் நம் அடையாளத்தை, முகவரியை இழப்பதா?

தமிழில் தொடங்கினால், தமிழிலேயே முழுவதும் பேசு!

ஆங்கிலத்தில் தொடங்கினால், ஆங்கிலத்திலேயே முழுவதும் பேசு!

இரண்டையும் கலந்து பேசி, இரண்டிலும் தெளிவாகக் கூச்சமின்றி, சரளமாகப் பேசுத்திறனை இழக்காதே! இரண்டையும் கலந்து பேசி, தாய்மொழியையும் சிதைக்காதே!

உரிமைக்குத் தமிழ் ! உறவுக்கு ஆங்கிலம் !

விளங்கிக்கொள் ; விளங்காமற் போகாதே !

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை