Thursday, December 31, 2009

சாதனை நாயகன் ...



ராஜ்குமார் அவர்களும் ,விஷ்ணுவர்த்தன் அவர்களும் கன்னட உலகில் இரு பெரும் தூண்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவரும் இன்று நம்மிடம் இல்லை.



இருவரும் இணைந்து நடித்த ஒரே படம்.அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி.



விஷ்ணுவர்த்தன் அவர்களை அரசியலில் இழுக்க பல கட்சிகள் முயன்ற போதும்,அவர் திரைப்படங்களிலே கவனத்தைச் செலுத்தினார்.அது மட்டுமல்லது தன்னுடைய திரையுலக நண்பருக்காக அரசியல் பிரச்சாரம் செய்துள்ளார்.



கன்னடத் திரையுலகின் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய படம் என்றால் விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த எஜமான படமாகும்.




முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப் பட்ட கன்னடப்படம் என்னும் பெருமையை விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த சிங்கப்பூரல்லி ராஜா குலா படத்தைச் சாரும்.



அது மட்டுமல்ல அவரின் பல படங்கள் கன்னடத் திரையுலகிலே முதல் முறையாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டவை.விரைவில் வெளிவர இருந்த ஆப்த ரக்ஷகா என்னும் படமும் அவரின் 200 - ஆவதாகப் படமாக அமைய இருந்தது.



மொழியுணர்வைத் தன்னுடைய படங்களில் என்றுமே காட்ட தவறியதில்லை விஷ்ணுவர்த்தன் அவர்கள்.இதற்குச் சான்றாகச் சொல்ல வேண்டுமென்றால் வானத்தைப் போல என்னும் படத்தில் விஜய்காந்த மணலைக் கொண்டு பேசும் வசனத்தை, விஷ்ணுவர்த்தன் அவர்கள் எஜமானா படத்தில் கன்னட மக்களை இணைத்துப் பேசுவதைப் பார்த்தால் புரியும்.

கன்னட மக்களின் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு பாடல்.




விஷ்ணு வர்த்தன் அவர்கள் கெளரவத் தோற்றத்தில் பல படங்களில் நடித்து இருந்த போதும்,பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடல்



அவரின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றேன்.

Sunday, December 27, 2009

குழலினிது யாழினிது - 1

சிரித்து விளையாடி யவள்
முத்த‌ம் கொடுத்தும்
சிறுத்துப் போகிறாள்.

குத்து குத்து தாம்ப‌ள‌ம்
விளையாடினாலும்
சிரிக்க‌ ம‌றுக்கிறாள்.

கையில் ப‌ப்பு க‌டைந்து
கிச்சு கிச்சு மூட்டினாலும்
சிரிக்க‌ ம‌றுக்கிறாள்.



க‌டைசியாய்
அவ‌ளே சொன்னாள்
மீசை குத்துப்பா

குறைத்து விடாலாமென்று
கத்திரியை எடுத்தால்

அவள் அம்மா தடுக்கிறாள்
அது ஒன்று தான் அழகு
அதுல கை வைக்காதீங்க‌

( ப‌டித்த‌தில் பிடித்த‌து: செஞ்சி த‌மிழினிய‌ன் அவ‌ர்க‌ளின் க‌விதை )

தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -2




வலையில் எப்பொழுதும்
வசமாய் மாட்டுபவை
மீன்கள் மட்டும் தான்
திமிங்கலங்கள் அல்ல.



வானத்தில் என்ன கலவரமா
வீண்மீன்கள் இல்லாமல்
வெறிச்சோடி கிடைக்கிறது.



தலைவரின் பிறந்தநாள்
தொண்டனுக்குப் பரிசாய்த்
தண்டனைக் குறைப்பு



மரங்களின் தவம்
மகிழ்ச்சியில் வானத்துத் தேவதை
மழையாய் வரம்.



தன்னம்பிக்கையற்றவரின்
தாய்மொழி
தற்கொலை

**********************

இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

Monday, December 21, 2009

தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -1



வியர்வை சிந்திக் கட்டிய‌
வீட்டில் வசதியுடன்
வாழ்கிறது சிலந்தி



சோர்ந்த பொழுதெல்லாம்
சிறகு விரிக்கச்
சொல்கிறது விசிறி



குளம் நிறைய நீர்
குருவி வந்து குடித்தது
குறைய வில்லை இன்னும்



பர‌ந்து விரிந்த மரம்
பறந்து வந்த பறவை
போட்டது பட்டா

****************************

இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

Thursday, November 26, 2009

மாவீரர் நாள்




உள்ள‌த்திலும், உண‌ர்விலும், உயிரிலும்
வாழும் தெய்வ‌ங்க‌ளுக்கு
என்னுடைய வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்

***************************************

ஆயிர‌ம் இர‌வுக‌ள் கடக்கின்ற‌ன‌
ஒரு விடிய‌லுக்காய்
ஆயிர‌ம் இர‌வுக‌ள் கட‌க்கின்ற‌ன‌
உத‌ய‌ங்க‌ளின் வ‌ருகைக்காய்
க‌ரு மேக‌ங்க‌ளின் வில‌க‌லுக்காய்
ஆயிர‌ம் க‌ண்க‌ள் காத்துள்ள‌ன‌
ஒரு விடிய‌லுக்காய்

*******************************


********* சிவரமணி அவர்களின் வரிகள் ************

( மறுமொழி மறுக்கப்பட்ட இடுகை )

Monday, November 23, 2009

எல்லாம் உன்னிட‌ம் உண்டு


கண்ணீர்க்கடலில்
தத்தளிக்கும்பொழுது எல்லாம்
கலங்கி விடாதே ...

வ‌ள்ள‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ரைப்ப‌ட‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ழிந‌ட‌த்த‌ மாலுமியாய் நீயும் உண்டு
வேறு என்ன‌ வேண்டும்
வேத‌னையைத் துடைத்திடு ...

அடைந்திடுவோம்
அக்க‌ரை ம‌ட்டும‌ல்ல‌,
எக்க‌ரையும் தான்
ஏனென்றால்
எல்லாம் உன்னிட‌ம் உண்டு.

( வார்த்தைகளாகவும் வரிகளாகவும் கிறுக்கியவை.)

Thursday, November 19, 2009

தேடல்...




அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல்...

உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல்...

அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல்...

புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை
அறியாமல்...

உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல்...

நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல்...

மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை
அறியாமல்...

என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !!!

( படித்ததில் பிடித்தது - வாஞ்சி கோவிந்தராசன் அவர்கள் எழுதிய‌ கவிதை )

*************************************************
இன்னும் சில தேடல் தொடர்புடைய கவிதைகள்

1.கவிநயா அவர்களின் கவிதை

2. சி. கருணாகரசு அவர்களின் கவிதை

Tuesday, July 7, 2009

நீங்காத நிலவரைகள் (Landmarks) - சூலை 2009 ஒளிப்படப்போட்டிக்கு












Monday, June 1, 2009

படமும் பாதிப்பும் - 01/06/2009







ஆதவனுக்கு முன்பே
அதிகாலையில்
கண் விழிப்பாய் - ‍‍உந்தன்
க‌ண்மணிக‌ளுக்காக‌...

அடுப்பு அடியில் ஆரம்பித்து
உடுப்பு அணிவித்து அனுப்பும்வரை - உந்தன்
இடுப்பு உடையும்.

இத்தனையும் முடிந்த பின்
இன்னமும் இருந்து கொண்டிருக்கும்
பணிகள் பற்பல‌...

துணி துவைப்பதிலும்
வீட்டை துடைப்பதிற்குள்
வந்துவிடும் மதியம்
வயிறும் - உந்தன்
நினைவிற்கு வரும்.

உண்ட உடன் ‍- உந்தன்
உள்ளம் உறங்குமா ?
உதிக்குமே - உந்தன்
மூளையில் வேலைகள் பற்பல‌...

காய வைப்பதிலும்
புடைப்பதிலும் - உந்தன்
பொழுது போய்
பொழுது வந்துவிடும்.

ஆயத்தம் ஆகுவாய் - உந்தன்
அடுக்களைப் பணிக்கு
அப்பனும் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டிக்குள்
தொலைந்து போய்
வட்டிலுக்கு வந்து
கட்டிலுக்குப் போவார்கள்.

இத்தனையும் முடிந்த பின்
கடமை முடித்து கண்ணயரும்
கதிரவனாய் - உந்தன்
இமை மூடி இளைப்பாறுவாய்
அன்னையே...
நாளைய கடமையைப் பற்றிய
நினைவோடு
நித்தரையில்...

Wednesday, May 27, 2009

படமும் பாதிப்பும் - 27/05/2009


படம் பார்த்து கவிதை




(Thanks - SanjaiGandhi )

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
ணவன்
தாரம்
ற்றும்
சங்கள் சேர்ந்தயுடன்.

.....................................................................................................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................


Saturday, May 16, 2009

படமும் பாதிப்பும் - 16/05/2009

உறவு இருந்தும் துறவு ...



(Thanks - SanjaiGandhi )

மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...


இத்தனையும் இருந்து என்ன ? இன்னும்
எத்தனை நாள் நான் இருப்பேன் ?

இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் ம‌னித‌ப்பந்தங்கள் எல்லாம் ...

மண்ணை நேசித்தது
மாபெரும் குற்ற‌மென‌ எண்ணி
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...

தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !

பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.

Sunday, April 12, 2009

வட்டத்திற்குள் பெண்





கணவன் அவன்
காலம் ஆனதும்
கன்னி அவள்
காலம் முழுவதும்
விதவை எனும்
வேடம் தரிக்க‌
வேண்டும் என்ற‌
வேதனைக்கு உள்ளாக்கி
வேடிக்கை பார்த்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

காலங்காலமாய்
கல்வி என்பது
ஆணுக்கு மட்டும்
கலவிக்கு மட்டும்
பெண் என்பதும்
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கற்பு என்பது
கன்னியருக்கே சொந்தம்.
காளையருக்கு எதற்கு
கடிவாளம் எனும்
கற்பனைகள் பிறந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கருவிலே
குழந்தை பெண் என்றால்
கள்ளிப்பால் என்றும்,
கருக்கலைப்பு என்றும்
கருணையற்று
கொடுமைகள் புரிந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

எண்ணிப் பாருங்கள்
எத்தனை எத்தனை
வேதனைகளில் வெந்து
துடித்திருப்பாள்
வட்ட்த்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கட்டுப்பாடு எனும் பெயரால்
காலங்காலமாய்
கன்னியரை
காயப்படுத்திய,
களங்கப்படுத்திய‌
கருத்துகளையும்
காரியங்களையும்
களைந்து எறியுங்கள்

ஆண் என்றும்,
பெண் என்றும்
பேதம் அற்ற‌
அடிமை அற்ற‌
புது தலைமுறையை
படையுங்கள்

-----------------------------------------------

கன்னி - பெண்

-------------------------------------------------

அழைப்பு விடுத்து, அன்புச்சங்கிலியில் கோர்த்து விட்ட‌ ஷைலஜா அவர்களுக்கு அகம் நிறைந்த நன்றிகள். என் எண்ணத்தை இங்கே கிறுக்கி உள்ளேன்.

மூவரை அழைக்கவேண்டும். அதனால்
மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

அதிகமாக ஆழமாக சிந்தித்தால்
அகப்பட்ட அரிமாக்கள் (சிங்கங்கள்) இவர்கள்
அய்யோ என்று அலறுவது கேட்கின்றது,
அடிக்கவும் வருவது தெரிகின்றது
அதாவது அன்பால், தயது செய்து
அடியேனை மன்னிக்கவும்.

1.அன்பு நண்பர் ஜோதிபாரதி அவர்கள் ( கவிதையாலும் தமிழாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் )

2.அன்பு நண்பர் குடந்தைஅன்புமணி அவர்கள் ( அய்க்கூ கவிதையால் அசத்திக் கொண்டு இருப்பவர் )

3.அன்பு நண்பர் ஆதவா அவர்கள் ( கவிதை, கதை என அனைத்திலும் அகம் கவர்ந்தவர் )

Wednesday, February 4, 2009

தமிழ் மறந்தே போகுமா ? ( வழக்கொழிந்த சொற்கள் )



தமிழில் இரண்டு இலட்சம் சொற்கள் உண்டு என்று இயம்புவதுண்டு.இதைக் கேட்டு
இதயம் இன்பத்தில் மிதப்பதும் உண்டு.ஆனால் தமிழ் நாட்டிலோ; மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்களும் அப்படியொரு ஆங்கில மோகம்.தவிர்க்க முடியாததும்,
தள்ளமுடியாததுமாகி விட்டது. படிக்காதவர்கள் இப்படி என்றால் படித்தவர்களையும் ஊடகங்களையும் பற்றி சொல்ல தேவையில்லை.இப்பொழுதெல்லாம் கீளின் பண்ணு
( சுத்தம் செய் ),ரெண்ட் ( வாடகை ), கார் ( மகிழுந்து ), குயிக்கா இழு
( விரைவாக இழு ) என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய அவல நிலைக்கு நாம் ஆட்பட்டு விட்டோம்.

நேற்று நாம் எப்படி இருந்தோம்.

பொங்க அடுப்புமுண்டு
பொங்கி வெளியே வந்து
பொகை போகச் சன்னலுண்டு

என்று சொல்லும் இல்லங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதா? இல்லையே பின் எப்படி மொழி மட்டும் மாறாமல் அப்படியே இருக்க முடியுமா?.ஆனாலும்
ஊரிலிருந்துப் பொழுதும், உறவினர்களுடன் உரையாடிப் பொழுதும், உதடுகள் உச்சரித்தச் சொற்கள் எல்லாம் மனதை விட்டு மறையும்பொழுதும்,வழக்கொழிக்கும்பொழுதும் வருத்தத்தான் வரச்செய்கிறது.

சிறுவனாக இருக்கையில் " ஒரியாட்டம் போடாமல், பொட்டாட்டம் இருக்க வேண்டும் இல்லையெனில் பண்டுதம் பார்க்க வேண்டும் " என்று அம்மிச்சி சொன்ன சொற்கள் இன்னும் நினைவை விட்டு அகல மறுக்கின்றது.

இப்படித் தான் ஒருமுறை உறவினர் ஒருவர் ஈரோட்டிலிருந்து எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரவில் தங்கிவிட்டு, மறுநாள் சீக்கடி என்று சொன்னப்பொழுது தூக்கி வாரிப் போட்டது.அப்பொழுது அம்மா , சொள்ளை ( கொசு )தான் கூறுகின்றார் என்று விளங்கிப்பொழுது விளங்கியது.

ஊடகங்கள் உதவி செய்வதை விட ஊறு தாம் விளைவிக்கின்றன, வானொலியில் நடக்கும் இந்த உரையாடலைக் கவனிங்கள்

" என்ன செய்யுறீங்க "

" தறி வச்சிருக்கோம் "

" லூம்சா ? கைத்தறியா ? "

" கையாலேதாங்க "

" உங்க ஹஸ்பெண்டுக்கு உதவுறதுண்டா ? "

" இல்லிங்க, வீட்டு வேலைதாங்க "

" ஓகோ ஹவுஸ் ஓய்பா ? "

தறி நெய்து வாழும் சிற்றூர் எளிய மக்களிடம் " இல்லத்தரசியை " - " ஒய்பு " ஆக்கும் வேதனையை என்னவென்று சொல்லுவது ?

தாலியைத் தெரிந்த நாமில் எத்தனைப் பேருக்கு தாழி, தாளி என்றால் என்னவென்று தெரியுமும்?

தாளை அறிந்தவர்கள் தாழையும், தாலையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

விரலைப் பார்த்தவர்களுக்கு விறலைத் தெரிந்திருக்க முடியாது.

வயிறு நினைவு வரும் அளவிற்கு பொந்தியும், கும்பியும் நினைவிற்கு வரவில்லை

சண்டை நினைக்கும்பொழுது சரவையும்,சல்லியமும் வருவதில்லை.

சினுக்குவரியும், மை கோதியும் மண்டைப் போட்டு உடைத்தாலும் கையில் சிக்குவதில்லை.

Rumour தெரிந்த நமக்கு உவலையும் புரளியும் தெரிவதில்லை.

நீராகாரம் இல்லாதப் பொழுது உவகாரத்திற்கு எங்கே போவது ?

சதுரம் (உடல்), கும்பா ( சர விளக்கு ), கோப்பு ( உருவம் ),இண்டு ( முள் மரம் ), கொப்பு (காதில் அணியும் நகை ), சாடு ( கூடை விடப் பெரியது ), குணுக்கு ( காதணி ),சட்டம் ( உடல் ), மஞ்சி ( மேகம் ), பதக்கம் ( தாலி ),தொசுக்கு ( தொடுப்பு ), காராட்டம் ( ஓரியாட்டம் ), ஒலுங்கு ( கொசு ), கின்னம் ( துன்பம் ) இன்னும் எத்தனைச் சொற்கள்.

சொற்களை மறக்காமல் இருக்கத் தான் இந்தப் பதிவுகள்
1.கொங்கு வட்டார வழக்கு

2.நெல்லை வட்டாரச் சொற்கள்

இன்னும் வேண்டுமா இவர்கள் எழுதுவதைப் படிக்கவும்.
1.பழமைபேசி

2.திவ்யாபிரியா

3. லதானந்த்


பிறைநிலாவைப் பார்த்து
மகன் கேட்டான்.
" ஏம்ப்பா நிலா
சூம்பிப் போச்சு ? "
தகப்பன் சிரித்துக் கொண்டு
பதில் சொன்னான்.
அதுக்கும் நம்மைப் போல்
மாதக்கடைசியோ
என்னவோ மகனே !

என்றுச் சொல்லாமல்,முடிந்தது முடிந்தாக இருக்கட்டும், இன்று முதல் இல்லை இல்லை இப்பொழுது இருந்தே தமிழரிடம் தமிழைப் பேசுவோம்.

இந்தத் தொடர்விளையாட்டுக்கு அழைத்த அமுதா அவர்களுக்கும் மற்றும் தமிழ்தினா அவர்களுக்கும் நன்றிகள்.

தொடர் பதிவு என்பதால் பல நல்ல உள்ளங்களை பதிவு இட அழைக்கின்றேன்.

1.கோமா அவர்கள்

2.அகரம்.அமுதா அவர்கள்

3.ஹேமா அவர்கள்

4.பாச மலர் அவர்கள்

5.ஜோதிபாரதி அவர்கள்

6.Ramya Ramani அவர்கள்

7.கவிநயா அவர்கள்

8.சதங்கா அவர்கள்

9.சின்ன அம்மிணி அவர்கள்

10.ஆ! இதழ்கள் அவர்கள்

11.ஒளியவன் அவர்கள்

12.விஷ்ணு அவர்கள்

13.சுந்தரா அவர்கள்

இறுதியாக தமிழண்ணல் அவர்களின் வரிகள்

நீ யார்?

உன் பெயரென்ன ?

உன் நிலையான முகவரி எது ?

உனக்கு - அதாவது உன்னை நீதான் என உறுதிப் படுத்துவதற்கு, உன் உடம்பில் ஏதும் மச்சம் இருக்கிறதா? வேறு அடையாளம் ஏதும் இருக்கிறதா ?

உனக்குச் சொந்த வீடு இருக்கிறதா?

உனக்கென்று ஏதேனும் சொத்து,செல்வம், தோட்டம் துரவு உள்ளதா?

உனக்குத் தெரிந்த , பெரியவர்கள் யாரும் இருக்கிறார்களா?

உனக்குக் குடும்பம், பிள்ளைகள், உறவுகள் உண்டா?

இவ்வளவும் கேட்கிறார்களே ? ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு வங்கிக் கணக்குக்கு, கடவுச்சீட்டுக்கு,வீடு கட்டக் கடனுக்கு - இவ்வாறு எதற்கெடுத்தாலும் நாம் உரிய விடை கூறி, எழுதிக் கொடுத்து , நம்மை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டிளதே?

தமிழர்களாகிய நாம் நம் தாய்மொழியை இல்லை என்று மறுக்க முடியுமா? ஒங்கி அறைந்தால், உண்மை வெளிப்படுமே , அம்மா ! என்று.

நமக்கு ஆங்கிலம் தொடர்புக்கு வேண்டும்; அதற்காக நாம் ஆங்கிலேயர்கள் ஆக முடியுமா ?

வருமானம் வேண்டும்; வயிற்றுப்பிழைப்புக்கு வழி வேண்டும்; அதற்கு ஆங்கிலம் உதவுகிறது.அது என்றும் உதவும் என்று கூற முடியுமா ?

தன்னை இழந்து வாழ்வதா? தரம் இழந்து தாழ்வதா? நாம் நம் அடையாளத்தை, முகவரியை இழப்பதா?

தமிழில் தொடங்கினால், தமிழிலேயே முழுவதும் பேசு!

ஆங்கிலத்தில் தொடங்கினால், ஆங்கிலத்திலேயே முழுவதும் பேசு!

இரண்டையும் கலந்து பேசி, இரண்டிலும் தெளிவாகக் கூச்சமின்றி, சரளமாகப் பேசுத்திறனை இழக்காதே! இரண்டையும் கலந்து பேசி, தாய்மொழியையும் சிதைக்காதே!

உரிமைக்குத் தமிழ் ! உறவுக்கு ஆங்கிலம் !

விளங்கிக்கொள் ; விளங்காமற் போகாதே !

Monday, January 19, 2009

உறங்கியது போதும் , உயிர்த்தெழு




உறங்கியது போதும்
உயிர்த்தெழு, இல்லையெனில்
கதை முடிந்து
கல்லறைக்குச் சென்று
கண்ணீர் அஞ்சலி செலுத்தும்
காரியத்திற்கு போக வேண்டியிருக்கும்.

உன்னுள்
உறக்கும்
உணர்வுகளைத் தட்டி எழுப்பி
உதிரம் சிந்திடும்
உன் உறவுகளுக்கு
உரிமைக்குரல் கொடுத்திடு

உயிர் துறந்து, உன்
உறவைப் பறைச் சாற்ற வேண்டாம்.

உரத்தக் குரல் கொடுத்து,
உணர்வற்று இருக்கும்
உடன்பிறப்புகளை மட்டுமல்ல,
உறங்கிக் கொண்டு இருக்கும்,
உணராமல் உள்ள
உலகை கொஞ்சம்
உயிர்த்தெழுச் செய்

Saturday, January 3, 2009

மனிதர்களா ? இல்லை மிருங்களா ?

மரிக்கும்
மனிதர்களைக் காணும்பொழுது எல்லாம்
மறந்தும் கூட
மனிதநேயம் வருவதில்லை.


ஓயாத அலையாய
ஓலமிட்டுக் கொண்டு இருப்பார்கள்
ஒப்படைக்க வேண்டும்
பிடித்தால்
பிரபாகரனை என்று

ஆட்சியைப் பிடிக்க
ஆடிக்கொண்டு இருப்பவர்களுக்கு
அழுகையும்
அவலங்களும் தெரியப் போவதில்லை

தலைவர்களே
தயவு செய்து உங்களை
தமிழர் என்று அழைத்துக் கொள்ள வேண்டாம்
அது
தமிழுக்கும்
தமிழருக்கும்
தலைகுனிவாகும்

மதமாற்றம் போல்
வேறு மொழிக்காவது மாறிக் கொள்ளுங்கள்

வேதனையும் தீருவதில்லை
கண்ணீரும் கரையப் போவதில்லை

இவர்களைக் காணும்பொழுது எல்லாம்
மனத்திற்கு தோன்றுவது
மனிதர்களா இல்லை
மிருங்களா என்று

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை