
ஆதவனுக்கு முன்பே
அதிகாலையில்
கண் விழிப்பாய் - உந்தன்
கண்மணிகளுக்காக...
அடுப்பு அடியில் ஆரம்பித்து
உடுப்பு அணிவித்து அனுப்பும்வரை - உந்தன்
இடுப்பு உடையும்.
இத்தனையும் முடிந்த பின்
இன்னமும் இருந்து கொண்டிருக்கும்
பணிகள் பற்பல...
துணி துவைப்பதிலும்
வீட்டை துடைப்பதிற்குள்
வந்துவிடும் மதியம்
வயிறும் - உந்தன்
நினைவிற்கு வரும்.
உண்ட உடன் - உந்தன்
உள்ளம் உறங்குமா ?
உதிக்குமே - உந்தன்
மூளையில் வேலைகள் பற்பல...
காய வைப்பதிலும்
புடைப்பதிலும் - உந்தன்
பொழுது போய்
பொழுது வந்துவிடும்.
ஆயத்தம் ஆகுவாய் - உந்தன்
அடுக்களைப் பணிக்கு
அப்பனும் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டிக்குள்
தொலைந்து போய்
வட்டிலுக்கு வந்து
கட்டிலுக்குப் போவார்கள்.
இத்தனையும் முடிந்த பின்
கடமை முடித்து கண்ணயரும்
கதிரவனாய் - உந்தன்
இமை மூடி இளைப்பாறுவாய்
அன்னையே...
நாளைய கடமையைப் பற்றிய
நினைவோடு
நித்தரையில்...