Tuesday, August 31, 2010

ஆயர்பாடி மாளிகையில் (மீள்பதிவு)



ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ- அவன்
வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகிறான் ஆராரோ.



தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான். தாய்மடியில் குழந்தை கண்ணன் எப்படி உறங்குவான் ? தாய் பாலை சுவைத்தபடியே தூங்குகிறான்.எப்படிப்பட்ட கண்ணனவன் ? மாயக்கண்ணன். கன்றின் உதாரணம் இங்கே ஏன் வந்தது ? நிகழ்கின்ற இடம் ஆயர்பாடி.


எந்த நிலையில் கண்ணன் தூங்குகிறான் ? வாய் நிறைய மண்ணை உண்டு, மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான். எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.மண்ணைத் தின்ற குழந்தை கண்ணனைக் கோபித்துக் கொண்டு தாய் யசோதா வாயைத் திறந்து காட்டும்படி கேட்கிறாள். வாயைத் திறக்கிறான் கண்ணன். அவனுடைய வாய்க்குள் பூமிப்பந்து சூழல்கிறது. தான் யார் என்பதைக் கண்ணன் விளையாட்டுப்போக்கிலேயே தன் தாய்க்கு உணர்த்திவிடுகிறான்.பிரபஞ்சமே அவனுக்குள் அடக்கம். அவன் பிரபஞ்ச சொரூபி.

அவதாரமாகிவிட்ட அவன் அடக்கமாக தான் யார் என்பதைத் தாய்க்கு உணர்த்துகிறான்.இந்த நான்கு வரிகளில் மனிதனுக்கும், பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு அற்புதமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சம், குழந்தை கண்ணனுக்குள் அடக்கம். கண்ணன் தாயின் மடியில் அடக்கம். பிரபஞ்சத்தில் மனித இயக்கமே தாய்மைக்குள் அடக்கம். கீதையில் கண்ணன் என்ன சொல்கிறான் ? பிரபஞ்ச இயக்கமே நானே இருக்கிறேன் என்கிறான்.



பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன்போல் லீலைசெய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



கோபியருடன் கண்ணன் செய்த லீலைகள் பிரசித்தம். இதை வெறும் சம்பவமாகப் பார்த்தால்
ஆயர்பாடி கோபியருடன் கண்ணன் லீலைகள் செய்தான் என்பதோடு முடிந்துவிடும். தத்துவ விளக்கமாக இதற்குப் பொருள் சொல்லப்படுவதுண்டு. கண்ணன் பரமாத்மா. கோபியர் ஜீவாத்மாக்கள். கண்ணன் கோபியரைத் தன்னுடன் அய்க்கியப்படுத்திக் கொண்டதும் ஜீவாத்மா பரமாத்மா உறவினைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.சம்பவமாகப் பார்க்காமல் உருவகமாகப் பார்த்தால் இதற்கு ஒரு புதிய தாத்பர்யம் கிடைக்கிறது.

கோபியர் கண்ணனை நாடிச் செல்வது மட்டுமல்ல, கண்ணனே கோபியரைத் தேடிச் செல்கிறார். ஜீவாத்மா தன்னை நாடி வரவேண்டுமென்று பரமாத்மா விரும்புகிறது. ஜீவாத்மாதான் பல்வேறு பந்தங்களில் சிக்கி பரமாத்மாவை விட்டு விலகி விலகிச் செல்கிறது. ஆனால் ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்கும்போது என்ன நிகழ்கிறது ?



மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்குகின்றபோது ஆனந்த மயக்கத்துக்கு உள்ளாகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் நெருங்கி விடுகிறபோது உலகமே இன்ப மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.

கண்ணன் ஒரு அவதாரம். தீமைகளை அடக்க வந்த அவதாரம். தீமைகளை அடக்கியவுடன் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிவிட்டதாக சாந்தி அவனுக்கு ஏற்படுகிறது. காளிங்க நர்த்தனத்தின் கருத்து இதுதான்.



நாகபடம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ



மோகம் என்பது ஆசை. யோகம் என்பது ஆசையினைக் கடந்தநிலை. கண்ணனைப் பொறுத்தவரையில் அவன் மேற்கொள்கின்ற மோகநிலைகூட ஒரு யோகநிலை ஆகிவிடுகிறது. அது எப்படி ?

கண்ணன் வெளிப்படுத்துகின்ற தோற்றம் மோகம். அவன் குறிவைக்கின்ற இலக்கு யோகம். கோபியருடன் புரிகின்ற லீலை மோகம். அதனால் அவர்கள் பெறுகின்ற நிலை யோகம். பரமாத்மா, ஜீவாத்மாக்கள் அனைத்தும் யோகநிலையை அடைய வேண்டுமென்று விரும்புகிறது. அதற்காகவே ஜீவாத்மாக்களைத் தன்பால் ஈர்க்க பரமாத்மா மோகநிலையினை மேற்கொள்கின்றது. பரமாத்மாவைப் பொறுத்தவரையில் மோகநிலை, யோகநிலை ஆகிய இரண்டும் ஒன்றேதான்.

கடமைகளை முடித்துக்கொண்டு அவன் உறங்கினாலும், அவனை மற்றவர்கள் உறங்க விடுகிறார்களா என்ன? யாரவனைத் தூங்க விட்டார் என்கிற கேள்வி அதிலிருந்துதான் எழுகிறது.



- அவன்
மோகநிலை கூட ஒரு
யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !


பரமாத்மாவாகிய கண்ணன் தூங்கிவிட முடியுமா என்ன? அவனுடைய தூக்கம்கூட ஒரு மாயத் தோற்றம்தான். தூக்க நிலையில் விழித்திருப்பான்.விழித்த நிலையில் தூங்குவான்.



கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ !



நிசமாகவே கண்ணன் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? பிரபஞ்ச சக்தியான கண்ணன் செயலற்ற நிலையினை அடைந்துவிட முடியாது. பிரபஞ்ச சொரூபியான கண்ணன் செயல்படாமல் இருந்துவிட்டால், பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்துப் போகும். கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும். ஆகவே அவனைத் தூங்க விடக் கூடாது. அதனால் அன்னையர் அனைவரும் சேர்ந்து அவனைத் துயில் எழுப்புவது அவசியமாகிறது.

அவன் துயிலெழுந்த பிறகு என்ன நடக்கும்? அவனுடைய லீலைகள் ஆரம்பமாகிவிடும். பிரபஞ்ச இயக்கம் சுறுசறுப்பு அடையும். கண்கொள்ளா அவனுடைய அழகுக் காட்சியைக் கண்டு தரிசிக்கலாம். போதையூட்டும் அவனுடைய முத்தங்களைப் பெற்று மகிழலாம்.

பாடல் முழுவதுமே கண்ணனின் உருவகம் தான்.கண்ணன் - கோபியர் உறவை வைத்து ஜீவாத்மா பரமாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.தீமைகளை அழித்து நன்மைகளை மேலோங்கச் செய்யும் அவதாரத்தின் நோக்கம் விளக்கப்படுகிறது. அதே சமயம் பகவானின் தேவை மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த உலகமே ஒரு முடிவில்லாத போர்க்களம். போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உலகம் முற்றிலும் நன்மையானதாகவோ அல்லது தீமையானதாகவோ இருந்து விடமுடியாது.நன்மைக்கும், தீமைக்குமிடையே போராட்டம் நடந்தபடியேதான் இருக்கும். இது மனித இயல்பின் மாற்ற முடியாத தன்மை.

அதே சமயம் தீமை மேலோங்கி நன்மையை அழித்துவிட அனுமதிக்கவும் முடியாது. தீமையின் கை ஓங்குகின்ற போதெல்லாம் பகவான் அவதரித்து தீமையை வெற்றிகொண்டு நன்மையை நிலை நாட்டுகிறார். அதுதான் " சம்பவாமி யுகே யுகே. "

இது ஒருபுறமிருக்க, மனித மனதுக்குள்ளேயேகூட நன்மைக்கும், தீமைக்குமிடையே தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் தீமையின் சக்தி மேலாதிக்கம் பெற அனுமதித்துவிடக் கூடாது.மனதுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற தீமையைக் கட்டுப்படுத்துவதற்கு வழி என்ன? நன்மையின் வடிவாக இருக்கும் பகவானிடம் மனதைச் செலுத்துவதன் மூலம் தீமையின் ஆதிக்கத்தைக் குறைத்துவிட முடியும். அன்பின் சொரூபம் இறைவன். அவனை நெருங்குவதன் மூலம் மன அமைதி பெற்று நிம்மதியை நம்மால் அனுபவிக்க முடியும். ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இதிலிருந்துதான் உதயமாகிறது.

ஒரு தத்துவதை இங்கே புரிந்துகொள்வது அவசியம். மனிதகுலத்தின் துயர் துடைக்க பகவான் தாமாகவே அவதரிக்கிறார். மனித இனத்தை உயர்த்துவதற்கு அவரே மனிதனாகவே பிறந்து, மனிதர்களின் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கு பெறுகிறார். கண்ணனுடைய அவதாரத்தில் லெளகீய இன்பங்களைக் கூட மனிதனுக்கும் கற்றுத் தருகிறார். சரீரம் எடுத்தபின் சரீரத்தின் சுகங்களைப் புறக்கணித்துவிட முடியாது. கோபியர்களுடன் கண்ணன் புரிகின்ற லீலைகளின் தாத்ப்ர்யம் இதுதான்.

சிற்றின்பம் இல்லாமல் பேரின்பம் இல்லை. சிற்றின்பத்தில் திளைக்கின்ற மனித உயிர், அதை மேல்நிலைப்படுத்துகின்றபோது அதுவே பேரின்பமாகி விடுகிறது. உலகில் மனிதனாகப் பிறந்தபிறகு மனித வாழ்க்கையின் ஆசாபாசங்களை அனுபவிக்காமல், பிறவிப் பெருங்கடலை நீந்துவது சாத்தியமில்லை.

கண்ணனாக அவதரித்து ஆயர்பாடியில் வாழ்ந்த மாயவனின் வாழ்க்கை இதைத்தான் நம்க்கு எடுத்துக் காட்டுகிறது.






ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை