ஆண்டவனின் அருள் வேண்டி ஆலயத்திற்கு ஆயிரம் ஆயிரம் அன்பளிப்பை அளிக்கின்றாய்.
ஆண்டவனை சிற்பங்களிலும் சிலைகளிலும் கற்களிலும் உருவம் கொள்கிறாய்.
அவனோ உயிருள்ள உள்ளங்களில் உறைந்து உள்ளதை உணர மறுக்கின்றாய்.
பகவானுக்கு செய்வது புண்ணியக்கணக்காக மாறும் என்று எண்ணிக்கொண்டு பரிதவிக்கும் உள்ளங்களுக்கு பரிவுக்காட்டாமல் பாவக்கணக்கை இரட்டிப்பு ஆக்கிக்கொண்டிருக்கிறாய்.
இரு கண்கள் நோக்கி இரு பெயர்கள் எழுதி இரு கைகள் கோர்த்து இரு உடல்கள் இணைந்து இரு உதடுகள் நனைந்து இருப்பது மட்டுமல்ல,
இரு இதயங்கள் பரிமாறி இரு உள்ளங்கள் ஒன்றாகி இருவரின் உணர்வுகளை மதித்து சுக துக்கங்களையும் பிள்ளை வளர்ப்பையும் சரிசமமாய் சுமந்து அடுப்பங்கரையும் பள்ளியறையும் பகிர்ந்து தாயாய் தந்தையாய் தோழியாய் தோழனாய் இருந்து உறவாடும் உன்னதமான உறவுக்கு பெயர் தான் திருமணம்.
சின்னம் என்றால் அடையாளம்,முத்திரை என்று ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
தோல்வியும் ஒரு சின்னம் தான்.ஆம் துவண்டுவிட்டால் தோல்வியும் ஒரு சின்னம் தான் துணிந்துவிட்டால் சின்னங்கள் எல்லாம் பின்னங்களாகும். வெற்றிகளே முழு எண்(ணங்)களாகும்.
உடல் வலியை நீக்க ஆயிரம் மருந்துகள் உண்டு. மன வலியைப் போக்க மார்க்கமுண்டு என்றால்,அது நம்பிக்கையே.
நம்பிக்கையுடன் நடைப்போடுங்கள் நாளைய உலகம் நம் கைகளிலே.
தமிழின் அழகே சொற்களை எப்படி கையாளுவது என்பதில் தான் உள்ளது.அப்படி பயன்படுத்தும்போது,அது அனைவரின் பார்வையைக் கவரும்.அந்த வகையில் நாடோடி இலக்கியனின் "உஷார் காதல்...!" கவிதைக் கூறலாம். ஒருமுறை அந்த வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்
காதலோடு காத்திருந்தேன் நீ வருவாய் என வந்த உடன் கேட்டாய் "உன் வருவாய் என்ன?"
வருவாய் என்றச்சொல் அதற்கு சாட்சி.
இந்த கவிதைப்படிக்கும்போது,புத்தக்கத்தில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.
கலைஞர் அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி. கழகத்திற்காக நிதி திரட்ட கலைஞர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வந்தார்.
அப்பொழுது கந்தர்வ கோட்டையிலிருக்கும் நண்பர் ஒருவர் கலைஞருக்குக் கடிதம் எழுதி தன் ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.கலைஞரும் அழைப்பிக்கிணங்கி, கழக நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
"கந்தர்வகோட்டைக்கு 'வரும்படி' என்னை அழைத்தார்கள். "வரும்படி" என்றால் கழகப்பொருளாளர் வராமல் இருப்பேனா? " என்று கலைஞர் கூறியதும் கூட்டத்தில் பலத்த கை ஓசை எழுந்தது.
இங்கே வரும்படி அதற்கு சாட்சி. தமிழை வாசிப்போம்.. தமிழை நேசிப்போம்.. தமிழையே சுவாசிப்போம்